மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதர்சனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மாதர்சனப்பள்ளி- சூளகிரி சாலையில் பீரேபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த விக்னேஷ் பலத்த காயம் அடைந்தார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் விக்னேஷுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.