மோட்டார் சைக்கிள் வேன் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பைங்குளம் பானகுடிவிளையை சேர்ந்த தங்கப்பன் மகன் சாஜன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த டேவிட் மகன் ராஜேஷ் இருவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகளாக இருந்துள்ளனர். இந்த இரண்டு நண்பர்களும் கூட்டாலுமூடு பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பைங்குளம் பகுதிக்கு போய்விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தாணக்குடிவிளை பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஒரு வேன் மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் கீழே விழுந்த சாஜனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். ராஜேஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அருகில் இருப்பவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேசும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நண்பர்களான சாஜன் மற்றும் ராஜேஷ் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள வேன் டிரைவர் தூத்தூரை சேர்ந்த ஹெல்வித் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.