இரண்டு மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் தலைமையாசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளையர் பகுதியில் மலர்வண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மலர்வண்ணன் பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் அங்குள்ள கல்லூரி பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக ராயகிரி பகுதியில் வசிக்கும் ராஜகுரு என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வேகமாக சென்று திடீரென மலர்வண்ணனின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டார். இந்த விபத்தில் மலர்வண்ணன் மற்றும் ராஜகுரு ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலத்த காயமடைந்த மலர்வண்ணன் மற்றும் ராஜகுருவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மலர்வண்ணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அங்கு ராஜகுருவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் இறந்த மலர்வண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.