புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ததை நோயாளிகள் வீடியோ எடுத்து அதை இணையங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் கொரோனா தனது வீரியத்தை காட்டிவருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இப்பொழுத வரை, 13,500 பேருக்கு மேல் நோய்த் தொற்று ஏற்பட்டு, 9,000 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 220 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
மேலும் குணமடையாமல் 4834 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வருவதால், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பலவும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன.இந்த நிலையில் புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மருத்துவமனையில் உள்ள உணவு வசதிகள், வார்டு வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்ய சென்றிருந்தார்.
#WATCH Puducherry Health Minister Malladi Krishna Rao cleaned a toilet at a #COVID19 ward at Indira Gandhi Govt Medical College & Hospital, during his visit to the hospital today. pic.twitter.com/3LFRrtD3iQ
— ANI (@ANI) August 29, 2020
அப்பொழுது கொரோனா வார்டில் உள்ள ஒரு கழிவறையில் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததை கண்ட சுகாதாரத்துறை அமைச்சர் திடீரென்று, பி.பி.இ உடையை அணிந்துகொண்டு கழிவறையை சுத்தம் செய்துள்ளார். இதனை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் தடுத்து நிறுத்த சென்றனர். ஆனாலும் மல்லாடி கிருஷ்ணாராவ் கழிவறையை சுத்தம் செய்த பின்னரே வெளியே வந்தார். இதனை கொரோனா நோயாளிகள் பலர் வீடியோ பதிவு செய்து இணையங்களில் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது. மேலும் அமைச்சரின் இத்தகைய செயலை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.