பிரபல மேடை நகைச்சுவையாளரான வீர் தாஸ் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“ஐ கேம் ஃபரம் டூ இந்தியாஸ்” என்ற பெயரில் பிரபல மேடை நகைச்சுவையாளர் வீர் தாஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. அதாவது வீர் தாஸ் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் இருவேறு முகங்கள் குறித்து ஆறு நிமிடம் விளக்கி வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “இந்தியாவில் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகமானோர் வேலை செய்தாலும், சுமார் 150 ஆண்டுகால பழமையான சிந்தனையை உடைய 75 வயது தலைவர்களின் பேச்சை தான் கேட்க வேண்டியதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
அதேபோல் இந்தியாவில் பெண்கள் பகல் நேரத்தில் போற்றப்பட்டாலும் கூட்டு பாலியல் வன்முறைகளால் இரவு நேரத்தில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு இருவேறு முகங்கள் கொண்ட இந்தியாவிலிருந்து தான் நான் வருகிறேன் என்று வீர் தாஸ் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதனை பலரும் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கின்றனர். மேலும் பாஜக செய்தித்தொடர்பாளர் ஆதித்யா ஜா, சொந்த நாட்டை வெளிநாட்டு மண்ணில் சிறுமைப்படுத்தியுள்ளதாக கூறி டெல்லி காவல்நிலையத்தில் வீர் தாஸ் மீது புகார் அளித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் ஆதித்யா ஜா “சொந்த தேசத்தை வேறு ஒரு நாட்டில் அவமதிப்பதை சிறிதளவு கூட பொறுத்துக் கொள்ள இயலாது. எனவே வீர் தாஸ்-ஐ கைது செய்யும் வரை தன்னுடைய போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் வீர் தாஸ் “இந்தியாவை அவமதிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. நான் நையாண்டியாக பேசிய வீடியோ தான் அது. எல்லா தேசத்திலும் நன்மையும் தீமையும், ஒளியும் இருளும் உண்டு. இந்த வீடியோவை தவறாக எண்ணி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்ப வேண்டாம்.
ஏனென்றால் அந்த நிகழ்ச்சியில் இந்திய நாட்டை சிறப்பிக்கும் வகையிலும், நம் தேசத்தை கண்டு பெருமிதம் கொள்ளும் வகையிலும் அங்கிருந்த அனைவரும் தேச பக்தியுடன் கைதட்டினர். எனவே இந்தியாவை அங்குள்ள மக்கள் நம்பிக்கையுடன் தான் உற்சாகபடுத்துகிறார்கள். நம்முடைய தேசத்திற்கு மதிப்பளிக்கும் மக்களின் கைத்தட்டல் அது. அதனை யாரும் அவமதிப்பாக எண்ண வேண்டாம் என்று வீர் தாஸ் கூறியுள்ளார். மேலும் உலகம் முழுவதும் எனது நாட்டின் பெருமையை கொண்டு செல்வேன் என்றும் வீர் தாஸ் பேசியுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் வீர் தாஸின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.