வேலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, அடுக்கம்பாறை, அணைக்கட்டு, குடியாத்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை இரவு 11 மணி வரை இடைவெளிவிட்டு பரவலாக செய்தது. எனவே கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் கொணவட்டம், சேண்பாக்கம், சம்பத்நகர், கன்சால் பேட்டை போன்ற குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்கள் விடிய விடிய தூங்காமல் விழித்திருந்து கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு சென்று மின்மோட்டார் மற்றும் கழிவு நீரை சுத்திகரிக்கும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு புகுந்த தண்ணீரை வெளியேற்றினர். மேலும் அங்கு இருக்கக்கூடிய கால்வாய் அடைப்புகளை சரி செய்து பிளீச்சிங் பவுடர் தூவி அதிகாரிகள் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். இதேபோன்று மாவட்டத்தில் மாங்காய்மண்டி, கோட்டை நுழைவு வாயில், நேதாஜி விளையாட்டு மைதானம், கிரீன் சர்க்கிள் போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.