வீட்டை சுத்தம் செய்து தருவதாக முதியவரை ஏமாற்றி நகை மற்றும் பணம் திருடி சென்றது தொடர்பாக பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பழனியாபுரம் பகுதியில் விவசாயி பெரியசாமி(85)- வீரம்மாள்(75) என்ற வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் வீரம்மாள் காய்கறி வாங்க கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பெரியசாமி தன்னுடைய மனைவியிடம் வீட்டை சுத்தம் செய்வதாக சொல்லி ஒரு பெண் வீட்டுக்கு வந்து விட்டு சென்றதாக கூறினார். இதனையடுத்து வீரம்மாள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 65 ஆயிரம் ரூபாய், மோதிரம், கம்மல், தங்க நாணயங்கள் போன்றவை திருட்டு போனது தெரியவந்தது.
இது தொடர்பாக வீரம்மாள் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சேலம் காந்திநகர் பெரியகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மைதிலி கூறியதாவது “சேலம் கோரிமேடு ஐயந்திருமாளிகை பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பெரியதல்லப்பாடி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் பாரதிராஜா ஆகிய தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்துதான் நான் திருடினேன்” என்று அவர் ஒப்புக்கொண்டார். அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். இதில் கைதான மைதிலி மீது பெரும்பாலான திருட்டு, வழிப்பறி வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.