அழிக்காலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்து மக்கள் சிரமப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு தாழ்வான பகுதியான அழிக்காலில் அதிக பாதிப்பு ஏற்படும். எனவே 2-வது நாளாக கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் அழிக்காலில் வசித்து வருபவர்கள் ஆங்காங்கே தனது உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த கடல் சீற்றத்தால் வீட்டில் உள்ள உபயோகப்பொருட்கள் அனைத்தும் நனைந்து நாசமானது. இதனையடுத்து கணபதிபுரம் பேரூராட்சியினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆங்காங்கே தண்ணீர் வடிய வடிகால்களை ஏற்பாடு செய்து பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தனர். அதன்பின் முட்டத்தில் 2013-ஆம் ஆண்டு தனியார் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டபின் அழிக்கால் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும், அதனை தடுப்பதற்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் கூறிகின்றனர்.
மேலும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி பாம்புரி வாய்க்கால் செல்வதனால் மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடும். ஆகவே மழை மற்றும் கடல் சீற்றம் ஆகிய இயற்கை பேரிடர்களுக்கு ஆளாகும் அழிக்காலில் மீனவ கிராமத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு விரைவில் எடுக்க வேண்டும் என்று ஊர் தலைவர் ஜோசப் மற்றும் நிர்வாகக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து அழிகாலில் வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க ஆங்காங்கே வீட்டின் முன் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தி இருக்கின்றனர்.