விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு சிந்துபூந்துறை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் நெல்லை உடையார்பட்டி குளத்தின் கரையில் 40 ஆண்டுகளாக சிட்டமாளும் அவருடைய சகோதரர் காந்தி என்பவரும் ஒரு கடையை நடத்தி வருகின்றனர்.
இந்த கடையானது சிறைவாசி கைதிகளின் மறுவாழ்வுக்காக சிறப்பு அனுமதியில் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டதாகும். இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த கடையால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. எனவே அங்கு தொடர்ந்து கடையை நடத்த அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.