கனமழையால் தத்தளித்து வரும் புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீருக்குள் புகுந்து உள்ளது. பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
இதனால் நகரப்பகுதி, கோரிமேடு, புதிய பேருந்து நிலையம், காமராஜர் நகர், முத்தியால்பேட்டை, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கிராமப்பகுதிகளில் வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் வெள்ளக்காடாக மாறியது. வில்லியனூர் பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடுகள் முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றன. தொடர் கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மின் கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.