வீடு இடிந்து விழுந்து இடிபாட்டில் 3 வாலிபர்கள் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இருதயபுரம் பகுதியில் அமிர்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலெக்சாண்டர், லியோபெலிக்ஸ், ஜான்போஸ்கோ என 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பயங்கரமான வெடி சத்தம் கேட்டுள்ளது. அந்த நேரம் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அங்கங்கே கீழே விழுந்தது. அதன்பின் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் ஆகியவை இடிந்து கீழே விழுந்து தரை மட்டமாகி உள்ளது.
அப்போது இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மூன்று வாலிபர்களும் படுகாயமடைந்து தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர். பின்னர் இவர்களின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது, பஞ்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக வனப்பகுதிகள் இருப்பதினால் அங்கே இருக்கும் முயல், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக அப்பகுதி மக்கள் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த 3 வாலிபர்களும் நாட்டு வெடி மருந்தை பயன்படுத்தியதால் வீட்டில் விபத்து ஏற்பட்டிருக்கலாம். மேலும் இது பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.