Categories
சினிமா தமிழ் சினிமா

மக்கள் பணி செய்யவரும் ‘மாஸ்டர்’ – இணையத்தை தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்..!!

‘ 234 தொகுதியும் சைலண்டா இருக்கனும், 2021ல் நாங்கதான் இருக்கனும். மக்கள் பணி செய்யவரும் ‘மாஸ்டர்’ ‘ என விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், கைதி பட நடிகர் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றுவரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

கறுப்பு நிறச் சட்டை அணிந்து மக்கள் கூட்டத்தில் விஜய் நிற்பது போலவும், அங்கு திரும்பிப் பார்த்து அமைதியாக இருக்குமாறு வாயில் விரல் வைத்தபடி சித்தரிக்கப்பட்டிருந்த செகண்ட் லுக் போஸ்டரை விஜய் ரசிகர்கள் ரசித்து இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசியலை மையப்படுத்தி புதிய போஸ்டர் ஒன்றை வடிவமைத்து விஜய் ரசிகர்கள் ஒட்டிய சம்பவம் இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போஸ்டரில், ‘ 234 தொகுதியும் சைலண்டா இருக்கணும், 2021இல் நாங்கதான் இருக்கணும். மக்கள் பணி செய்யவரும் ‘மாஸ்டர்’ ‘ என விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வேகமாகப் பரவி வருவதோடு சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ள இந்தப் போஸ்டரை விஜய் ரசிகர்களான சென்னை ஆதம்பாக்கம் டி.ஜெய், ஈசிஆர் பி சரவணன் ஆகியோர் ஒட்டியுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் பலர் விஜய்யின் அரசியல் பிரவேச போஸ்டரை விமர்சிக்கவும் தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |