இந்திய வங்கிகளில் அளவுக்கதிகமாக கடனை பெற்றுக்கொண்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் இங்கிலாந்திற்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க இங்கிலாந்து உயர் நீதிமன்றம் உத்தரவு விதித்துள்ளது.
இந்தியாவிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்ற பல முக்கிய வங்கிகளில் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு கடன் தொகையை பெற்றுள்ளார். இதனையடுத்து இவர் கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜய் மல்லையா வங்கிகளிடமிருந்து பெற்ற கடன் தொகைக்கு வங்கி நிர்வாகிகள் 11.5 சதவீதம் கூட்டு வட்டியை விதித்து அசலுடன் தங்களுக்கு திருப்பி செலுத்துமாறு கூறிவருகிறது. இதற்கிடையே ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் அவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டதோடு மட்டுமின்றி அவைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதால் இந்திய வங்கிகள் அதனை பறிமுதல் செய்ய முடியாது.
இவ்வாறான சூழலில் லண்டனிலுள்ள நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் விஜய் மல்லையாவின் சொத்துக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை ரத்து செய்வது தொடர்பான அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து உயர் நீதிமன்றம் விஜய் மல்லையாவின் இந்தியாவிலிருக்கும் சொத்துகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை அகற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருடைய சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்கம் செய்வதற்கும் இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.