கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தமிழ்நாடு அரசு நடிகர் விஜய் சேதுபதி உள்பட சில திரைத் துறையினருக்கு கலைமாமணி விருதை அறிவித்தது.ஆகஸ்ட் மாதமே இந்த விருது கொடுக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் விஜய் சேதுபதி அவ்விருதை பெற முடியாமல் போனது. இந்நிலையில் வெகு நாள்களாய் தனது ‘சங்கத்தமிழன்’ திரைப்பட வெளியீட்டுக்காக காத்திருந்த விஜய் சேதுபதி இன்று கலைமாமணியை அமைச்சர் பாண்டியராஜனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மேலும் இன்று ரிலீசாகவிருந்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் சில நிதி சிக்கல்களால் வெளிவராமல் இருக்கிறது. தீபாவளியன்றே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவிர்க்கமுடியாத காரணங்களால், படக்குழு ரிலீஸ் தேதியை நவம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்தது.இன்று நிச்சயம் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நேரத்தில் படம் வெளியாகாமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கலைமாமணி விருதை பெற்றுவிட்டு வந்த விஜய் சேதுபதியிடம் பட வெளியீட்டு தாமதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இது எத்தனை முறை சொன்னாலும் தீராத பிரச்னை, இதை உங்களிடம் சொன்னாலும் எதும் ஆகப்போவதில்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.