பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பியை காவல்துறையினர் இன்று கைது செய்திருக்கிறார்கள்.
விஜய நல்ல தம்பி மீது இதற்கு முன்பு பண மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது. எனவே, காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில், கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் தனிப்படை காவல்துறையினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதாவது ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 30 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்திருக்கிறார்.
எனவே, இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 15ம் தேதி அன்று புகார் தெரிவித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து விஜய நல்லதம்பியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆவின் மற்றும் நியாய விலை கடைகளில் வேலை வாங்கி கொடுப்பதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரின் உதவியாளர்களான பாபுராஜ், பலராமன் மற்றும் முத்துப்பாண்டி உட்பட நான்கு பேர் 3 கோடி ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
விஜய நல்லதம்பி, பரமசிவம், முருகன் மற்றும் இளங்கோ போன்றோர் இதில் இடைத்தரகர்கள் என்று தெரியவந்திருக்கிறது. ஆனால், நல்ல தம்பி, ராஜேந்திரபாலாஜி தான் இந்த மோசடிக்கு காரணம் என்று கூறி அவர் மீது புகார் தெரிவித்தார். தற்போது, விஜய நல்ல தம்பியை காவல்துறையினர் இன்று கைது செய்திருக்கிறார்கள்.