Categories
உலக செய்திகள்

“விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி!”…. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 21-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் பொதுமக்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். இதனால் மக்கள் தங்களை காத்துக்கொள்ள பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் ஒரு போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானமானது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், மற்ற நாடுகளும் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய உதவியாக அமையும்.

இந்த தீர்மானத்திற்கு குடியரசு எம்.பி லிண்ட்ஸே கிரஹாம் முன்மொழிந்ததோடு, குடியரசுக் கட்சியும், ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த தீர்மானம் பற்றி ஜனநாயக கட்சியினுடைய நாடாளுமன்றத்திற்கான குழுத் தலைவரான சக் ஸ்கூமர் தெரிவித்திருப்பதாவது, அவையில் இருக்கும் அனைவரும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டிருக்கிறோம்.

குடியரசுவாதிகள், ஜனநாயகவாதிகள் என்று பாகுபாடின்றி ஒன்றிணைந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்க்குற்றவாளி என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உக்ரேன் நாட்டு மக்களுக்கு எதிராக நடக்கும் இந்த வன்முறைகளுக்கு புடின் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து அவரால் கண்டிப்பாக தப்ப முடியாது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |