விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டி அடித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜல்லிப்பட்டி, சின்னகுமாரபாளையம், மானுப்பட்டி, ராமே கவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அங்குள்ள விளை நிலங்களில் தென்னை உள்பட பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர், உணவு தேவைக்காக வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ராமே கவுண்டன்புதூர் கிராம எல்லையில் உள்ள விளை நிலங்களில் கடந்த சில நாட்களாக 5-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மனித-விலங்கு மோதல் தடுப்புகுழுவினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு யானைகளை விரட்டி அடித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, வனஎல்லையில் இருந்து தள்ளி அமைந்துள்ளன விளைநிலங்களுக்குள் யானைகள் வரை தொடங்கி அங்குள்ள பயிர்களை சேதப்படுத்துவது மன வேதனையை தருகிறது. இதனால் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து வந்தால் மக்களுக்கு அச்சம் நீங்கும். மேலும் சாகுபடி சேதமடைந்தது குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.