விளையாடச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுண்டங்கிபாளையம் பகுதியில் ராமசாமியின் மகன் மௌனிஷ் வசித்து வந்தார். இவர் பள்ளி விடுமுறையை தொடர்ந்து சேலம் மாவட்டம் துளுக்கனூர் ஆனைக்கல் மேட்டில் உள்ள தனது தாய்மாமன் தினேஷ் என்பவரது வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வெளியில் விளையாட சென்ற மௌனிஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய்மாமன் மௌனிஷை பல இடங்களில் தேடி வந்த நிலையில் அவர் துளுக்கனூர் ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மௌனிஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே மௌனிஷ் ஏறி தண்ணீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆழமான பகுதிக்குள் சிக்கி இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.