விளையாட்டு திடலில் இளைஞர்களின் போர்த் தேங்காய் விளையாட்டு போட்டி நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, மணமேல்குடி, திருவாப்பாடி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சானாகரை, பைங்கால், பேராவூரணி, தென்னங்குடி, வளப்பிரமன் காடு, செருவாவிடுதி, பனஞ்சேரி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக்கொள்ளும் போர் தேங்காய் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதாவது எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வர். இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்து கொள்வார்.
இந்த மோதலுக்கான ஒரு போர்த்தேங்காய் ரூ.300 முதல் ரூ.500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். மேலும் ஒரு தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து செல்பவர்களும் உள்ளனர். இந்நிலையில் செரியலூர் கிராமத்தில் வழக்கம் போல விளையாட்டு திடலில் போர் தேங்காய் விளையாட்டுப் போட்டி நடந்தது. இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்தனர். ஒரு சிலர் தேங்காய்கள், பல தேங்காய்களை மோதி உடைத்தது. இந்த விளையாட்டு போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தேங்காயுடன் இளைஞர்கள் கலந்து கொண்டனர். கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட பரிசுப்போட்டி இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்பட்டது.