விளையாடிக்கொண்டிருந்த போது பெரிய பாறை கல் உருண்டு விழுந்ததில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள பெரிய புதூர் பகுதியில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளது. இவர்களில் விக்னேஷ் என்ற சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் மூன்று பேரும் இணைந்து கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தனது அத்தையின் வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கம். இந்நிலையில் விக்னேஷ் தனது அத்தையின் குழந்தைகளுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது காட்டுப் பகுதியில் இருந்த பெரிய பாறை கல் ஒன்று திடீரென உருண்டு சென்று விளையாடிக்கொண்டிருந்த விக்னேஷின் மீது விழுந்து விட்டது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற குழந்தைகள் அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விக்னேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.