சமூகவலைதளங்களில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பெண்கள் ஆலோசனை குழுமம் சார்பில் ‘இன்றைய சமூக சூழலில் பெண்களின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதில் அவர் கூறியதாவது, பெண்கள் நம் சமூகத்தின் ஆணிவேர். தற்போது சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் பெண்கள் சிறந்த சாதனையளர்களாக உள்ளனர். மேலும் பெண்கள் நன்றாக படித்து சமுதாயத்தில் உயரிய பதவியிலும் இருக்கிறார்கள். எந்த ஒரு செயலாக இருந்தாலும் பெண்கள் என்னால் முடியும் என்று நினைத்து தைரியமாக முன்வரவேண்டும். அவ்வாறு வந்தால் மட்டுமே அவர்கள் சமுதாயத்தில் சிறந்து விளங்க வேண்டும்.
பெண்கள் பிரச்சினைகள் மற்றும் தோல்விகளை கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை முற்றிலும் கை விட வேண்டும் எனவும், கல்வி ஒன்றுதான் பெண்களை சாதனையாளர்களாக மாற்றும் என்றும் கூறினார். மேலும் பெண்கள் தங்களது செல்போன்களுக்கு தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும், சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் தங்கள் புகைப்படங்கள் பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார். இதுபோன்ற பிரச்சினைகள் என்றால் பெண்கள் தைரியமாக காவல்துறையினரிடம் புகார்’ அளிக்க முன் வரவேண்டும். பெண்கள் வாழ்க்கையில் சில விதிமுறைகளை கடைபிடித்து நமது குறிக்கோள்களை அடைந்தால் மட்டுமே நமது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் தென்பாகம் காவல்துறையினர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.