விவசாயியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விவசாயி தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேளாரஅள்ளி கிராமத்தில் இடும்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இடும்பன் மற்றும் அவரது உறவினரான கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் ஊரில் முக்கிய பிரமுகர்கள் இடும்பன் குடும்பத்தினரை அழைத்து பேசியுள்ளனர். இதனையடுத்து ஊர் பிரமுகர்கள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
மேலும் 2 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தினால் மட்டுமே ஊரில் இருக்க வேண்டும் இல்லையெனில் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவீர்கள் என்று ஊர் பிரமுகர்கள் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து இடும்பன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாருக்கு காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த இடும்பன் தனது நிலத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தனக்கு உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.