பொதுமக்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட மொழியனூர் ஊராட்சியில் நெடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கோபமடைந்த கிராம மக்கள் தனி ஊராட்சியாக நெடிக் கிராமத்தை அறிவிக்கவில்லை என்றால் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை அனைவரும் புறக்கணிப்போம் என முடிவு எடுத்துள்ளனர்.
அதோடு பொதுமக்கள் தங்களது ரேஷன் மற்றும் ஆதார் கார்டுகளை அப்பகுதி தாசில்தாரிடம் ஒப்படைப்பதற்காக வண்டிகளில் புறப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் துணை மாவட்ட ஆட்சியர் அமித் மற்றும் தாசில்தார் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெடி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஆகாத மக்கள் தங்களது ரேஷன் மற்றும் ஆதார் கார்டுகளை தாசில்தார் மற்றும் துணை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முற்பட்டுள்ளனர்.
ஆனால் அதனை வாங்க மறுத்த அதிகாரிகள் உடனடியாக தங்களது வாகனங்களில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் பொதுமக்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அந்த சமயத்தில் பெண் ஓருவர் நெடி கிராமத்தை ஊராட்சியாக அறிவிக்காவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொள்வேன் என மிரட்டியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறை அதிகாரி பழனிசாமி மற்றும் தாசில்தார் செல்வம் ஆகியோர் இணைந்து அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்திவிட்டு மாவட்ட ஆட்சியருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது இன்னும் 2 நாட்களுக்குள் பிரச்சனைக்கான தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியதாக அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்துள்ளனர். தீர்வு காணப்படவில்லையெனில் எங்களது ரேஷன் மற்றும் ஆதார் கார்டுகளை நிச்சயமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்று கூறிவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.