போலியாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கும்பல் போலியான மதுபானங்களை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் கொடியம் கூட்டு ரோடு சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அதன்பின் அந்த இரண்டு பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சதீஷ்குமார் மற்றும் சிவகுமார் என்பதும், இரண்டு பேரும் சேர்ந்து சாராயத்தை சாக்குப் பையில் வைத்து புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிவகுமார், சதீஷ்குமார், ரவி, அன்பழகன் என 4 பேரும் இணைந்து புதுச்சேரியில் இருந்து சாராயம், போலி ஸ்டிக்கர்கள் மற்றும் காலி மது பாட்டில்களை வாங்கி வந்துள்ளனர். அதன்பின் இவர்கள் சாராயத்துடன் கலர் பொடியை கலந்து போலியான மதுபானம் தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 20 லிட்டர் சாராயம் மற்றும் 792 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.