காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதற்கிடையில் நேற்று காபூல் விமான நிலையத்தில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேறும்படி அமெரிக்கா எச்சரிக்கை அளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காபூலில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் காபூல் விமான நிலையத்தை சுற்றி ஒரு தண்ணீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் அங்குள்ள மக்களின் நீர் ஆதாரமாகும். ஆனால் தற்பொழுது அந்த கால்வாய் முழுவதும் இரத்தக் கறையாகவுள்ளது.
மேலும் அங்கு கிடக்கும் உயிரற்ற உடல்களை ராணுவ அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது காண்போரின் நெஞ்சை கலங்க வைத்துள்ளது. இது குறித்து அமெரிக்கா மத்திய கமாண்ட் படையின் ஜெனரல் ஃபிரான்க் மெக்கென்ஸி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “காபூல் விமான நிலையத்தில் இன்னும் பல தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் ராக்கெட் ஏவுகணை மூலமும் அல்லது கார் போன்ற வாகனங்களில் வெடிகுண்டுகளை நிரப்பியும் தாக்குதல் நடத்தலாம். எனினும் நாங்கள் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.