விமானப்படை வீரர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் இந்திய விமானப்படை பயிற்சி தளத்தில் இருக்கும் கண்காணிப்பு கோபுரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் விஷ்வகர்மா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த கண்காணிப்பு கோபுரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு வீரர் என சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
இந்நிலையில் ஆகாஷ் விஷ்வகர்மா மாலை 3 மணி முதல் 5 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து மற்றொரு வீரர் 5 மணிக்கு பணி மாற்றுவதற்காக சென்ற போது இருக்கையில் அமர்ந்தவாறு நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் சொட்டிய நிலையில் ஆகாஷ் விழுந்து கிடப்பதை கண்டு அந்த வீரர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்போது இன்சாஸ் என்ற வகை துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு ஆகாஷ் விஸ்வகர்மா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அதன்பிறகு அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விமானப் படை வீரர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.