விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதன் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து ‘விமானம் 1775’ புறப்பட்டு வாஷிங்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கண்சாஸ் சிட்டி விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானம் எதற்காக தரை இறங்கியது என்பது குறித்து விசாரிக்கையில் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இதில் விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு பயணி விமானியின் அறைக்குள் நுழைந்துள்ளார். அவர் அங்கிருக்கும் கட்டுபாட்டு பட்டனை பயன்படுத்தி விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார்.
இதனை எதிர்பார்க்காத விமானி சுதாரித்துக்கொண்டு அந்த நபரை தடுக்க முயன்றார். இதனையடுத்து அங்கு வந்த விமான பணிபெண்கள் மற்றும் பணியாளர்கள் அந்த நபரை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். அதன்பின் அந்த நபரின் தலையில் ஒரு விமான பணியாளர் காபி கோப்பையினால் அடித்து கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இதனையடுத்து விமானம் தரை இறங்கிய பிறகு மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த பயணி போதையில் இருந்தாரா? பாத்ரூம் என நினைத்து கதவை திறக்க முயன்றாரா? அல்லது வேண்டுமென்றே அப்படி செயல்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.