விமானத்தின் மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் போதை பவுடரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டுத் தபால் சரக்கக பிரிவிற்கு விமானத்தின் மூலம் வந்த பார்சல்களை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெதர்லாந்திலிருந்து சென்னையில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும், அமெரிக்காவிலிருந்து சேலத்தில் இருக்கும் முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த 2 பார்சல்களிலும் சான்றுகள் மற்றும் ஆவணங்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. ஆனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்துள்ளனர்.
அப்போது அதில் நெதர்லாந்தில் இருந்து வந்த பார்சலில் போதை பவுடர் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும். இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து மற்றொரு பார்சலை சோதனையிட்டதில் 80 ஆயிரம் மதிப்புமிக்க கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின் அந்த பார்சலில் உள்ள முகவரிக்கு சென்று அதிகாரிகள் விசாரித்தபோது அவை பொய்யானது என்று தெரியவந்தது. இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள் கல்லூரி மாணவர்கள், வசதிபடைத்த இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.