விமானத்திலிருந்து மனிதக் கழிவுகள் தோட்டத்தில் விழுந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிரித்தானியாவில் ராயல் போரோ ஆஃப் வின்ட்சர் மற்றும் மெய்டன்ஹெட் விமானப் பேரவையின் கூட்டம் நடைபெற்றது. இதில் க்ளெவர் ஈஸ்ட் வார்டின் கவுன்சிலரான Karen Davies கலந்துகொண்டு பேசியுள்ளார். அவ்வாறு அவர் பேசும்பொழுது அரிய மற்றும் அதிர்ச்சியான ஒரு நிகழ்வு குறித்து கூறினார். அதில் “லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு உள்ளே மற்றும் வெளியே வருவதற்கான முக்கிய பாதை வின்சர் பகுதி ஆகும்.
இந்த பகுதியில் செல்லும் ஒரு விமானத்தில் இருந்து மனிதக்கழிவுகள் கீழே உள்ள குடியிருப்பு மீது விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த சம்பவமானது இந்த ஆண்டு ஜூலையில் விமான சேவைகள் குறைவாக இயக்கப்பட்ட போது நிகழ்ந்துள்ளது. இது குறித்து அவர் கூறியதில் “அந்த பகுதியில் உள்ள குடியிருப்பாளர் மீதும் அவரின் தோட்டத்திலும் அனைத்து கூடைகளிலும் மனிதக்கழிவுகள் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
குறிப்பாக விமான கழிவறைகளில் பயணிகளின் கழிவுகளை சிறப்பு தொட்டிகளில் சேமித்து வைத்து பிறகு விமானம் தரை இறங்கியவுடன் அவற்றை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வார்கள். மேலும் இது குறித்து விமான நிலையத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்த விட்ஃபீல்ட் பாரிஷ் கவுன்சிலர் ஜியோஃப் பாக்ஸ்டன் கூறியதில் “இந்த சம்பவம் மிகவும் அரிதான ஒன்றே. நான் நீண்டகாலமாக பணிபுரிந்துள்ளேன். இது போன்றதொரு சம்பவத்தை நான் கண்டதில்லை” என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து சிவில் ஏவியேஷன் ஆணையத்திடம் கேட்ட பொழுது அவர்கள் கூறியதில் “விமானத்தில் உறைவிக்கப்பட்ட மனித கழிவுகள் மற்றும் கிருமி நாசினிகள் பிரித்தானியா வான்வெளியில் விழுந்தது ஒரு அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது வானிலை காரணமாக நிகழ்ந்திருக்கலாம். இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.