சூடானிலிருந்து கத்தாரில் உள்ள தோஹாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தின் விமானியை பூனை தாக்கியதால் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
கடந்த வாரத்தின் புதன் கிழமை சூடானின் தலைநகரமான கார்ட்டூமில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டாரில் இருக்கும் தோஹாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது . அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானியின் அறைக்குள் பூனை ஒன்று பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்ட அந்த பூனை விமானிகளின் மீது பாய்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தியது.
இதனால் விமானி கார்ட்டூம் விமான நிலையத்திலேயே விமானத்தை தரையிறக்கினார். உடனடியாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பூனை வெளியேற்றப்பட்டது. இருப்பினும் அந்த விமானம் தோஹாவுக்கு தாமதமாகவே புறப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அங்குள்ள பத்திரிகைகள், துப்பரவு பணியின்போது பூனை விமானியின் அறைக்குள் சென்று பதுங்கியிருந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.