வீணாகும் தண்ணீரைக் கொண்டு கருங்குளத்தை நிரப்ப வேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து அதிராம்பட்டினம் அருகில் கருங்குளம் கிராமம் இருக்கின்றது. அந்த கிராமத்தில் வசித்துவரும் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு கருங்குளம் நீராதாரமாக விளங்கி வருகின்றது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை நம்பி 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் இருக்கின்றது. ஆனால் இந்த குளம் முறையாக பராமரிக்கப்படாமல் இருக்கின்றது. எனவே இந்த குளத்திற்கு பல வருடங்களாக நீர்வரத்து இல்லாததால் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகின்றது.
இங்கு இருக்கக்கூடிய ஆழ்குழாய் கிணற்றுகளில் வரும் தண்ணீரும் உப்பு நீராக மாறிவிட்டது. இந்நிலையில் நசுவினி ஆற்றில் அதிராம்பட்டினத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை தண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதனால் இந்த மழைநீரை தேக்கி வைத்தால் கோடை காலங்களில் கால்நடைகள் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் இந்த தண்ணீரை தேக்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கருங்குளத்தை தூர்வார வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.