பொதுமக்கள் தங்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து கொண்டாடுவதற்கு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஈரோடு மாவட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியபோது, கொரோனா தொற்றின் பாதிப்பை உணர்ந்து தமிழகத்தில் வருகின்ற 15-ஆம் தேதி வரை கொண்டாட இருக்கின்ற சமயவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது.
அதாவது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடத்தில் சிலை வைத்தல், ஊர்வலத்தில் கொண்டு செல்லுதல் மற்றும் நீரில் கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகவே பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இந்த விழாவை கொண்டாட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தனி நபர்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிபாடு செய்த சிலையை கோவிலின் வெளிப்புறத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் வைத்துவிட்டு செல்லலாம். அதனை இந்து சமய அறநிலையத்துறையினரால் முறைப்படி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த வழிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து விழாவிற்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்குவதற்கு கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வாங்கிச் செல்ல வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், வருவாய் அதிகாரி முருகேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன் கார்த்திக் குமார், தனித்துணை கலெக்டர் குமரன் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.