விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வருடந்தோறும் இந்து முன்னணி சார்பாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாடுவதற்கும், சிலை ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தெய்வத்திடம் முறையிட்டு போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனிடம் முறையிட்டு இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் இந்து முன்னணியின் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் குமார் தலைமையில், கோபி நகர செயலாளர் நாகேந்திரன், லக்கம்பட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று கவுந்தப்பாடி ராஜ ராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பி.பி.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மேலும் இந்து இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் சபரி, நகர பொதுச் செயலாளர் ரங்கன், நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.