15 டன் எடை உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விநாயகர் சிலையானது கிரேன் மூலம் கன்டெய்னர் ஏற்றப்பட்டு மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சிற்பக்கலை கூடம் உள்ளது. இங்கு மும்பையில் உள்ள ஜீவ்தானி மந்திர் கோவிலில் நிறுவுவதற்காக 10 அடி உயரத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கும் பணியானது ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பணியை பத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் சுமார் இரண்டு மாதங்களாக வடிவமைத்து வந்தனர். இந்த விநாயகர் சிலையை 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் மூஷிக வாகனம் தாங்கிய அமர்வுடன் 10 அடி உயரத்தில் செதுக்கி வந்தனர். இதனையடுத்து விநாயகர் அமர்ந்த கோலத்தில் 6 அடி அகலத்தில் நான்கு கரங்களில் லட்டு, அங்குசம், பாசம், அபயம் தாங்கிய திருக்கோலத்தில் உள்ளார்.
இந்த விநாயகர் சிலையானது சைவ ஆகம முறைப்படி வடிவமைக்கப்பட்ட வலம்புரி விநாயகராவார். இந்நிலையில் கிரேன் உதவியுடன் பாலிஷ் போடப்பட்ட இந்த விநாயகர் சிலையை சிற்பிகள் சாலைக்கு எடுத்து வந்தனர். அதன் பின்னர் சைவ ஆகம முறைப்படிவிநாயகர் சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கிரேன் மூலம் தூக்கி கண்டெய்னர் லாரியில் வைத்து மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடத்தி இந்த சிலையானது மும்பையில் உள்ள ஜீலானி மந்திர் கோவிலில் உள்ள கருவறையில் வைக்கப்பட உள்ளது.