விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த இளைஞரை கைது செய்த போலீசார் 30 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மாவட்டங்கள் அனைத்திலும் பட்டாசு உற்பத்திக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் கணஞ்சாம்பட்டியில் வீடுகளில் வைத்து பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் தங்க மாரியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி கணஞ்சாம்பட்டி, தாயில்பட்டி, கலைஞர் காலணி போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளை சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து கணஞ்சாம்பட்டியை சேர்ந்த குமார்(28) என்பவர் தனது தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் வைத்து பட்டாசுகள் தயாரிப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் தயாரித்த 30 கிலோ சரவெடிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.