இந்துக்கள் மீதான வன்முறை தாக்குதல் வங்காளதேசத்தில் அதிகரித்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேசத்தில் இந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட மதம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறி நவராத்திரியை முன்னிட்டு குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பந்தல்கள் மீது தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இந்து கோவில்கள் மர்ம நபர்கள் சிலரால் சூறையாடப்பட்டது. இதன் காரணமாக பல இடங்களில் வன்முறையும், பதற்றமும் நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வன்முறையை கட்டுப்படுத்தியுள்ளனர்.
அதன் பிறகு இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கதேசத்தின் உள்துறை மந்திரி அசாதுஜமான் கான் கமல் உறுதியளித்திருந்தார். அந்த வகையில் வன்முறையாளர்கள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து வன்முறையாளர்கள் சிலர் நேற்று முன்தினம் 20-க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தியதோடு, 66 வீடுகளை பயங்கரமாக அடித்து நொறுக்கியுள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் ரங்கபுர் என்ற கிராமத்தில் மர்ம நபர்கள் சிலர் இந்துக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்காள அரசு மதரீதியாக வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தும் இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. அதாவது இந்தியாவுடனான உறவை சேதப்படுத்தும் சதியின் ஒரு பகுதியாக வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் இந்த சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதோடு வங்காள அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.