பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வன்முறையாக வெடித்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் அந்நாட்டு அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை அழிப்பதாக கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அதன்படி சுமார் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் நேற்று முன்தினம் பிரான்ஸ் முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பாரிசில் பேரணியாகச் திரண்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 காவல்துறை அதிகாரிகளை சரமாரியாக தாக்கியதால் வன்முறை வெடித்துள்ளது.
மேலும் போராட்டக்களத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதோடு காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வீசியுள்ளனர்.
இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் நோக்கில் காவல்துறையினர் அவர்கள் மீது தண்ணீரை பீச்சியடித்ததோடு கண்ணீர் புகை குண்டுகளையும் அவர்கள் மீது வீசியுள்ளனர். இந்த சம்பவத்தால் தலைநகர் பாரிஸ் முழுவதும் வன்முறையாகவே காட்சி அளித்துள்ளது.