கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என்ஹான்ஸ் ஏவியன்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் 48,000 ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் சேவையுடன் விஐபி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையாக மாறியது. ஏனெனில் சபரிமலையில் இதுவரை விஐபி தரிசனம் என்று எதுவுமே இருந்ததில்லை.
இதன் காரணமாக கேரளா நீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், விளம்பரம் செய்த நிறுவனம் விளம்பரத்திலிருந்து விஐபி தரிசனத்தை நீக்கியதோடு மன்னிப்பும் கேட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் கூறியதாவது, சபரிமலை நிலக்கல் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை மிகவும் அத்தியாவசியமான தேவைக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
ஏனெனில் வனவிலங்குகளின் வாழ்விடமாக அது இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர் தளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 12 முறை மட்டுமே ஹெலிகாப்டர்கள் தரையிறங்கியுள்ளது. மேலும் ஐயப்பன் கோவிலுக்கு சாதாரணமான பக்தர்கள் தான் வருகிறார்கள். எனவே முன்பு தொடர்ந்தது போன்றே இனியும் தொடர வேண்டும். விஐபி தரிசன முறையை கொண்டு வரக்கூடாது என திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.