உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் கட்டப்பட்ட மேம்பாலம் இடம்பெற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உபியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
ஆனால் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் ,பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் திட்டம் தீட்டுகின்றன. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்ட திட்டங்களை விளக்கும் வகையில் விளம்பரங்களை பாஜக வெளியிட்டு வருகிறது. அதன்படி, “Transforming Uttar Pradesh under Yogi Adityanath” என்ற தலைப்பில் யோகி அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான முழுப்பக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மம்தா பானர்ஜி அரசால் கொல்கத்தாவில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மம்தா பானர்ஜியின் உறவினரும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “யோகி ஆதித்யநாத்தை பொருத்தவரை உத்தரபிரதேசத்தை மாற்றுவது என்றால் மேற்கு வங்க அரசால் கட்டபட்ட கட்டிடஙக்ளின் படங்களை திருடி தனது சாதனையாக கூறிக்கொள்வது போல” என்று விமர்சனம் செய்துள்ளார்.