Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நான் சொல்வதை விராட் கோலி ஏற்றுக்கொள்வார்’ – ரோஹித் சர்மா!

‘சத்தம் நமது கவனத்தை திசைதிருப்பும். அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நாம் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த பாதுகாப்பு வளையத்திற்குள், யாரையும் அனுமதிக்கக் கூடாது. இது இளம் வீரர் ரிஷப் பந்த்திற்கு உதவலாம். எனக்கு இதுதான் உதவியது’ என்கிறார் ரோஹித் சர்மா.

2019ஆம் ஆண்டில் ரோஹித் சர்மாவை விடுத்து இந்திய அணியின் வெற்றிகளை எழுதிவிட முடியாது. சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன், உலகக்கோப்பைத் தொடரில் 5 சதம், அனைத்து விதமானப் போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 2,442 ரன்கள் என 2019ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு சிறந்த வருடமாக அமைந்துள்ளது. இந்த 12 கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ரோஹித் சர்மா பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில், ‘எனது மனைவி ரித்திகா, மகள் சமைரா ஆகியோரால் முன்பைவிட மாற்றங்கள் நிறைந்த ரோஹித் சர்மாவாக மாறியுள்ளேன். வெளியே இருப்பவர்கள் என்ன பேசினாலும், நான் கவலைப்படுவதில்லை. அதேபோல் மற்றவர்களின் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நான் அந்த வயதைக் கடந்துவிட்டேன் என நினைக்கிறேன்.

குடும்பத்தினருடன் ரோஹித்

இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வருடமாக அமைந்தது. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து யோசிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன.

முன்பெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று அதிகமாக நினைப்பேன். ஒவ்வொரு டெஸ்ட் இன்னிங்ஸ் முடிந்த பின்னும், வீடியோ அனாலிஸ்ட் உடன் அமர்ந்து அதிகமாக யோசிப்பேன். ஆனால் அப்படி செய்வதே எனது விளையாட்டை நான் ரசிக்க முடியாமல் போனது. 2018-19 ஆஸ்திரேலியா தொடரின்போது என்னுள் ஒன்றை மட்டும் கூறிக்கொண்டேன். என்ன ஆனாலும் சரி, நான் எனது ஆட்டத்தைப் பற்றியும், எனது டெக்னிக்கைப் பற்றியும் கவலைப்படப்போவதில்லை.

எல்லோரும் தென் ஆப்பிரிக்க தொடரை தான் எனது கடைசி டெஸ்ட் வாய்ப்பாகக் கருதினர். ஆனால் ஒரு விளையாட்டு வீரனாக நான் அப்படி எண்ண முடியாது. அதனை இறுதி வாய்ப்பாக எண்ணினால், என்னால் நிச்சயம் சிறப்பாக ஆடியிருக்க முடியாது.

ரோஹித் சர்மா

எதிர்மறையான எண்ணங்களோடு என்னால் கிரிக்கெட் ரசித்து ஆடமுடியாது. அதேபோல் ஒவ்வொரு வாய்ப்பு கிடைக்கும் போதும் நான் அதனை வாய்ப்பாகக் கருத முடியாது. ஏனென்றால், எனது வயது 30-ஐ கடந்துவிட்டது. தொடக்க வீரராகக் களமிறங்க வேண்டும் என்ற வாய்ப்புக்காக காத்திருந்த எனக்கு, வாய்ப்பு கிடைக்கும்போது ஏன் கவலைப்பட வேண்டும்.

கிரிக்கெட் மட்டுமல்ல உலகின் எந்த விளையாட்டாக இருந்தாலும், சத்தம் இருக்கத்தான் செய்யும். அந்த சத்தம் நமது கவனத்தை திசைதிருப்பும். அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நாம் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த பாதுகாப்பு வளையத்திற்குள், யாரையும் அனுமதிக்கக் கூடாது. இது இளம் வீரர் ரிஷப் பந்த்திற்கு உதவலாம். எனக்கு இதுதான் உதவியது. யாருடைய விமர்சனங்களும், கருத்துக்களும் என்னை நான் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்கிறேன்.

ரோஹித் சர்மா

உலகக்கோப்பைத் தொடருக்கு பின் வீரர்கள் குறித்து சில கதைகள் வெளியாகியது. அந்த கதைகளில் எனது நண்பர்கள் குறித்தும், என்னைப் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.

ரோஹித் சர்மா

அனுமதிக்கப்பட்ட நாள்களுக்கு மேல் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது குடும்பத்தினரை உடன் வைத்துக்கொண்டார்கள் என எழுதப்பட்டிருந்தது, என்னை வெகுவாகப் பாதித்தது. என்னைப் பற்றி என்ன விமர்சனங்கள் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதில் எனது குடும்பத்தைச் சேர்க்கக்கூடாது. நான் சொல்வதை விராட் ஏற்றுக்கொள்வார் என நினைக்கிறேன். ஏனென்றால் எங்கள் எல்லோரின் வாழ்க்கையிலும் குடும்பமே முக்கிய பங்கு வகித்து வருகிறது’ என்றார்.

Categories

Tech |