கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கும் தனக்கும் இடையே பொதுவான தன்மை பற்றி குறிப்பிட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். இதுபற்றி பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், “எனக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவரும் நானும் வெவ்வேறு பின்புலத்தில் உள்ளோம். தனது தனித்துவத்தால் அவர் பெயர் பெற்றிருப்பதுடன், ரசிகர்கள் விரும்பும் நபராகவும் மாறியுள்ளார்.
எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் ஒரேயொரு பொதுவான தன்மையைக் கூற வேண்டுமென்றால் சர்ச்சைகள்தான். அதிமான சர்ச்சைகளைச் சந்தித்துதான் நானும் அவரும் பிரபலமாகியுள்ளோம். கோலி தனது ஆக்ரோஷ தன்மைக்காக பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்துள்ளார். அவரைப் போல் நானும் ஆக்ரோஷமானவர்தான்.
ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்காது. அடுத்தடுத்து போராட்டங்களை சந்திக்க நேரிடும். அவற்றை கடக்க கடின உழைப்பும், முயற்சியும் செய்ய வேண்டும். தனது வாழ்க்கையை சரியான வடிவத்துக்கு கொண்டு வருவது என்பது விளையாட்டு வீரர்களுக்கு சவால் நிறைந்த பணி” என்றார்.
இந்தியாவுக்காக விளையாடிய கபடி விளையாட்டு வீராங்கனை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘பங்கா’ என்ற படத்தில் நடித்துள்ளார் கங்கனா. இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக அவர் பங்கேற்று வருகிறார். அப்போது அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.