இளம் வீரர்கள் அற்புதமாக ஆடுகிறார்கள் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்
உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரிஷப் பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இனிவரும் காலங்களில் அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள 3 வகையான கிரிக்கெட் தொடரிலும் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்து கூறியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா வுக்கு அவர் அளித்த பேட்டியில், “இளம் வீரர்கள் அற்புதமாக ஆடுகிறார்கள். அவரின் தன்னம்பிக்கையை பார்க்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது. நாங்கள் ஆடும் காலத்தில் 19-20 வயதில் இருக்கும் போது இது போன்ற வீரர்கள் பாதி அளவு கூட இல்லை. ஆனால் இப்போது உள்ள இளம் வீரர்கள் வயதை மீறி துடிப்புடன் முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறார்கள். இவர்களின் திறமை ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்கள் மூலம் வெளிவந்துள்ளது.
மேலும் தன்னம்பிக்கையுடன் அவர்கள் வருகிறார்கள். தவறுகள் இருந்தால் அதனை உடனே திருத்திக் கொள்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் மக்கள் கூட்டத்தின் முன் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் நாட்டிற்காக விளையாடுகிறோம் என்ற நோக்கம் இருக்க வேண்டும்” என்றார். மேலும் ஓய்வறை சூழல் குறித்து விராட் கோலி பேசுகையில், ஓய்வறையில் வீரர்களை திட்டும் பழக்கமில்லை.தோனி எப்படி குல்தீப்புடன் நட்புடன் இருந்தாரோ அதே போல தான் நானும் இருக்கிறேன்” எனக் கூறினார்.