ரயில்வே மேம்பாலத்தில மேலே ஏறி வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் ஏறிய ஒரு நபர் தற்கொலை செய்ய போவதாக சத்தமிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அந்த நபரை கீழே இறங்கும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிக் கொண்டே இருந்தார். இதனிடையில் ஒருவர் பாலத்தின் மேலே ஏறி கீழே இறங்கி வா பேசிக் கொள்ளலாம் என்று அந்த நபரிடம் கூறியுள்ளார். எனினும் அந்த நபர் பாலத்தில் இருந்து கீழே இறங்க மறுத்து விட்டார்.
இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலத்தின் மீது ஏறி அந்த நபரிடம் பேசி அவரை கீழே அழைத்து வந்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நியூ எல்லீஸ் நகரை சேர்ந்த ஜெயக்குமார் மகன் லெனின்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
மேலும் லெனின்குமாருக்கும், செல்லூர் வைத்தியநாத புரத்தைச் சேர்ந்த சுருதி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுருதிக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக லெனின்குமார் தன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாமியார் லெனின்குமாரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியதால் மனமுடைந்த அவர் பாலத்தின் மேலே ஏறி நின்று தற்கொலைக்கு முயற்சி செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் லெனின்குமாரை காவல்துறையினர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.