Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற போது… டிரைவரான வாலிபருக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

டிரைவரான வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஜமீன் இலந்தைக்குளம் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வேலு தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பொக்லைன் டிரைவரான திருமலைக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வீட்டில் இருக்கும் போது அவரின் நண்பர்களான மூன்று பேர் சென்று அவரை விருந்து சாப்பிடுவதற்கு அழைத்துள்ளனர். ஆனால் திருமலை குமாரின் தாயார் அங்கு செல்லக்கூடாது என்று கூறியதால் அவரின் நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்கள் சென்று திருமலை குமாரை அழைத்ததால் அவர் தனது தாயிடம்  தெரிவிக்காமல் அவர்களுடன் சென்றுள்ளார்.இந்நிலையில் திருமலை குமாரின் தாயாருக்கு பொக்லைனின் உரிமையாளர் போன் செய்து  அவரை வேலைக்கு வருமாறு அழைத்த போது தான் தனது மகன் வேலைக்கு செல்லவில்லை என்று வேலு தாயிக்கு தெரியவந்துள்ளது.

இதனால் வேலு தாய் உடனடியாக அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டில் திருமலைக்குமாரை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அப்போது அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தோட்டத்தில் திருமலைக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமலைக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு வேலு தாய் தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து திருமலைக் குமாரின் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு அவரின் உடலை பெற்றுக்கொள்ள அரசு மருத்துவமனையில் காத்திருந்த அவரது உறவினர்கள் அப்பகுதியில்  திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன் என்பவர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் திருமலைக்குமாரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், அவரின் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை திருமலைக்குமாரின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அதிகாரிகள் திருமலைக்குமாரின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமலைகுமாரின் நண்பர்களான மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |