வைரஸ் ஷூட் அவுட் என்ற சாதனம் ஒன்று கொரோனாவை அழிக்குமா என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் இந்த வைரசுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் பணியை இந்திய அரசும், பிற உலக நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனையை தீவிரப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்துவதன் மூலம் கொரானா வைரஸ் சங்கிலியை முறியடிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சமயத்தில் இதை பயன்படுத்தி ஒரு சிலர் கொரோனாவை அழிக்கும் சாதனம், மருந்து என புது புது வசதிகளுடன் பல பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வைரஸ் ஷூட் அவுட் என்ற ஐடி கார்டு வடிவமைப்பு கொண்ட சாதனம் ஒன்று காற்றில் பரவும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியது என்றும், கொரோனா வைரஸை அழிக்கும் என்ற விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதனை கழுத்தில் மாட்டிக் கொண்டால் நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று கூறப்பட்டதை அடுத்து ,இது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட மருத்துவர்கள் இந்த வைரஸ் ஷூட் அவுட் கொரோனாவை அழிக்காது என்று கூறியதோடு , இதில் இருக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு சுவாசப் பிரச்சனை மற்றும் கண் அரிப்பு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.