ஏரியில் குளிக்கச் சென்ற பெண் மற்றும் வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சி.என். பாளையம் பகுதியில் முனியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனோகர் என்ற மகனும் புவனேஸ்வரி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் முனியனின் மகனான மனோகருக்கு அப்பகுதியில் அமைந்துள்ள கோவில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து முனியனின் மகளான புவனேஸ்வரி அவரது சகோதரியின் மகனான விஜய் மற்றும் உறவினர்களுடன் இணைந்து அப்பகுதியில் அமைந்துள்ள ஏரிக்கு குளிப்பதற்கு சென்றுள்ளனர்.
அப்போது புவனேஸ்வரி ஏரியில் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்து கொண்டுயிருக்கும்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த விஜய் தனது சித்தியான புவனேஸ்வரியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனாலும் விஜய்க்கு நீச்சல் தெரியாததால் புவனேஸ்வரியுடன் அவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இதனைபார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய விஜய் மற்றும் புவனேஸ்வரியை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புவனேஸ்வரி மற்றும் விஜயின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.