விசைத்தறி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சக்திவேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன்பின் சர்க்கரைநோய் அதிகரிப்பால் சக்திவேலின் காலில் புண் ஏற்பட்டு அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு கால் அகற்றப்பட்டது.
இதனால் மனவேதனையில் இருந்த சக்திவேல் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து சக்திவேலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சக்திவேல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சக்திவேலின் மனைவி முருகம்மாள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.