காவல் துறைக்கு விசாரணைக்கு சென்று வந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஜானகி. இவர் கடந்த 22 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார் . மேலும் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அய்யாவு என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர்.
இந்நிலையில் மன வேதனையுடன் வீட்டிற்கு திரும்பிய அய்யாவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக அய்யாவு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள் அய்யாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மணல்மேடு காவல் நிலையம் அருகே முள் வேலிகளை அமைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர் . மேலும் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதால் அய்யாவு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.