விஷவாயு தாக்கியதால் ஓரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிவேடு கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் சித்தஞ்சி கிராமத்தில் இருக்கும் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த ஆறு வருடங்களாக விவசாயம் செய்து வந்துள்ளார். இவரின் மகள் நிர்மலாவை சுபாஷ் என்பவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணி, சுபாஷ் ஆகிய இருவரும் சித்தஞ்சியில் இருக்கும் நிலத்தில் நெற்பயிர் நடவு செய்வதற்கு சென்றுள்ளனர். அதற்காக கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி நிலத்தை உழவு செய்து கொண்டிருக்கும் போது திடீரென மோட்டார் பழுது ஏற்பட்டு தண்ணீர் குறைவாக வெளியேறி இருக்கிறது.
அந்நேரம் மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக கயிறு மூலமாக மணி கிணற்றில் இறங்கி உள்ளார். அப்போது திடீரென மூச்சுத் திணறி அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுபாஷ் மாமனாரை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். பின் அவரும் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து இரவு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் நிலத்திற்கு சென்று பார்த்த போது மணியின் சட்டை கிணற்றின் மேலே கிடந்ததுள்ளது. அதற்குப் பிறகு கிணற்றின் உள்ளே பார்த்ததில் சுபாஷ் மற்றும் மணி ஆகிய இருவரும் பிணமாக மிதந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும் மற்றும் காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மின்சாரம் கசிவு ஏற்பட்டதில் சுபாஷ்,மணி ஆகிய இருவரும் மயங்கி விழுந்தார்களா என ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் துணியை பற்ற வைத்து தீப்பந்தம் மூலமாக கிணற்றுக்குள் இறங்கிய போது திடீரென தீ அடைந்ததால் அவர்கள் விஷவாயு தாக்கி இறந்து இருப்பது தெரியவந்துள்ளது. அதற்குப் பிறகு பாதாள கொலுசு மூலமாக போராடி இருவரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.