சென்னையில் பணிபுரிய விரும்புபவர்கள் தாங்கள் வேலை பார்க்க உள்ள நிறுவனத்தின் மூலம் இ பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதலவர் உத்தரவிட்டுள்ளார். பல தொழில் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன. சென்னை இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி வரும் இந்த சூழ்நிலையில், தொழில் நிறுவனங்களில் வேலை செய்வதற்காக ஆட்கள் தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் work from home இல் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களும் அலுவலகத்திற்கு திரும்புமாறு அறைகூவல் விடுக்கப்பட்டு வருகிறது. எனவே வெளிமாவட்டங்களில் இருப்பவர்கள் மீண்டும் சென்னை வந்து பணிபுரிய விரும்பினால், அவர்கள் வேலை பார்க்கவுள்ள நிறுவனம் மூலம் இ பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னைக்கு வந்ததும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் எனவும்,
இரண்டு நாட்களாக தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு இ பாஸ்க்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தொடர்ந்து பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரம் தற்போது இ பாஸ் உடன் வந்தால் வாழவைக்கும் சென்னை என்றாகி விட்டது என்று நகைக்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், அது மக்களை சிந்திக்கவும் வைக்கிறது.